அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Friday 16 November 2012

முஹர்ரம் மாதமும் மூடப் பழக்கங்களும் (பகுதி 1)

புது வருடத்தை அடைந்திருக்கும் நாம், இஸ்லாமிய வருடத்தின் முதல் மாதமான இந்த முஹர்ரம் மாதத்தைப் பற்றியும் அந்த மாதத்தில் இஸ்லாமிய மக்களில் சிலர் செய்துவரும் மூடப் பழக்கங்களையும் பற்றியும் இப்போது பார்ப்போம்.

இஸ்லாத்தில் (போர் செய்வதற்குத் தடுக்கப்பட்ட) நான்கு புனித மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். இஸ்லாமிய ஆண்டான ஹிஜ்ரி ஆண்டின் துவக்க மாதமான இந்த முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாள்தான், இந்த மாதத்திற்கு மெருகூட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆனால், முஹர்ரம் மாதம் பிறந்துவிட்டால் மார்க்கத்தின் பெயரால் பல்வேறு அனாச்சாரங்கள் நம் மக்களிடையே அரங்கேறுவதைப் பார்க்கிறோம். அந்த பத்தாம் நாளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் கொடுக்கவேண்டுமோ அதை விடுத்து, இந்த மாதத்தில் இஸ்லாம் கூறாத பல்வேறு அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் மக்களிடையே கடைப்பிடிக்கப்படுகின்றன.

                                                   

முஹர்ரம் பிறை ஒன்று முதல் பத்து வரை பல சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைவேற்றப்படுகின்றன. இவற்றை அல்லாஹ்வோ அவனுடைய தூதரோ சொல்லித் தந்தார்களா? அவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் ஏதாவது சம்பந்தம் உள்ளதா? இந்த கொண்டாட்டங்களினால் உண்மையில் நன்மைதான் கிடைக்குமா? என்பதையெல்லாம் நாம் தெரிந்துக் கொள்ளும் முன்னர், இவையெல்லாம் இவர்கள் எதை வைத்து உண்டாக்கிக் கொண்டார்கள் என்ற அடிப்படையை தெரிந்துக் கொள்வோம்.

ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரில் நடைபெற்ற ஒரு போரையும் அதன் விளைவுகளையும் அடிப்படையாகக் கொண்டே இவை நடத்தப்படுகின்றன. இந்தப் போரில் நபி(ஸல்)அவர்களின் பேரரான ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் (முஹர்ரம் பத்தாம் நாளில்) நடந்ததால் இதன் நினைவாக 'ஷியாக்கள்' என்று சொல்லப்படுவோர் அந்த நாளை துக்க நாளாகக் கொண்டாடும் கலாச்சாரத்தை உருவாக்கிக் கொண்டார்கள். இஸ்லாத்திற்கு முற்றிலும் எதிரான இந்த கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளிலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவியுள்ளது.

துக்க நாளாக கொண்டாடப்படும் இந்த முஹர்ரம் மாதம் பத்தாம் நாளை கோலாகலமாகக் கொண்டாடுவது ஷியாக்களின் வழக்கம். முஹர்ரம் பண்டிகை என்னும் பெயரில் ஷியா முஸ்லிம்கள் இப்பண்டிகையை வெகு விமரிசையாகக் கொண்டாடுகின்றனர். வட இந்தியாவில் மஹாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம் போன்ற பகுதிகளிலும் குறிப்பாக மும்பை, குஜராத், லாகூர், பாட்னா, லக்னோ, பைசாபாத், குவாலியர் போன்ற இடங்களிலும், தமிழகத்தில் மேலப்பாளையம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் ஷியாக்கள் வாழக்கூடிய பகுதிகள் அனைத்திலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ஹஸன், ஹுஸைன் இருவரும் உலகின் இரு நறுமணம் மிக்க மலர்கள். (ஆதாரம் புகாரி)
இதுபோன்ற இன்னும் பல சிறப்புகள் அவ்விருவருக்கும் உண்டு என்பதில் எந்த மாற்றுக் கருத்துமில்லை. ஆனால் ஹுஸைன்(ரலி) கொல்லப்பட்ட சோக சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாளில் நடந்ததால் அந்த நாள் துக்க நாளாக ஒருபோதும் ஆகிவிடாது. அதுபோல் இவர்கள் பெயரால் நடத்தப்படும் பித்அத்(வழிகேடு)களை இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்கவுமில்லை. ஏன் இஸ்லாம் இதை அனுமதிக்கவில்லை? அப்படி என்னதான் செய்கிறார்கள் இந்த பண்டிகை(?)யில் என்று, அதைக் கொண்டாடி பழக்கமில்லாத மக்களும் தெரிந்துக் கொள்வதற்காக அதைப்பற்றி முதலில் கூறவேண்டியுள்ளது.

இந்த பண்டிகையில் அவர்கள் செய்யும் முக்கிய சடங்கு 'பஞ்சா எடுத்தல்' என்பதாகும். உருது மற்றும் ஹிந்தி மொழியில் 'பாஞ்ச்' என்றால் 'ஐந்து' என்பதை அனைவரும் அறிவோம். 'பஞ்சா' என்று சொல்ல‌ப்படும் அலங்கரிக்கப்பட்ட ஒரு சப்பரத்தில் ஐந்து விரல்கள் கொண்ட கை ஒன்று வைக்கப்படும். இதில் சிம்பாலிக்காக முஹம்மத்(ஸல்), அலீ(ரலி), பாத்திமா(ரலி), ஹஸன்(ரலி), ஹுஸைன்(ரலி) என்று ஐந்து பேரைக் குறிப்பிடுவதே இந்த பஞ்சா எனும் ஐந்து விரல்கள் கொண்ட கையாகும். இதை அடிப்படையாகக் கொண்டே இதற்கு 'பஞ்சா' என்ற பெயர் வந்தது.


ரதம் போன்ற ஒன்றை ஜரிகைகளாலும் கலர் பேப்பர்களாலும் அலங்கரித்து சப்பரத்தில் வைத்து, பஞ்சா என்று சொல்லப்படும் அந்த கைச்சின்னத்தை வெள்ளியினால் செய்து, மரத்தினாலான‌ ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாள்களைக் கொண்டு சுற்றப்பட்டு அதில் பொருத்தப்பட்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். (பார்க்க: படம் 1 & 3). இதுதான் 'பஞ்சா' என்ற சப்பரத்தின் அமைப்பாகும்.


முஹர்ரம் மாதத்தின் முதல் பிறையிலிருந்து, 'பஞ்சா' வைக்கப்பட்டிருக்கும் அந்த இடம் பரபரப்பாக‌ ஆரம்பித்துவிடும். முஹர்ரம் பிறை ஒன்றில் இதன் நடைவாசல்கள் திறக்கப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்காக(?) பஞ்சா வீற்றிருக்கும். பஞ்சா அலுவலகத்தின் பிரம்மாண்ட பந்தலில் எப்போதும் மக்கள் வெள்ளம் அலைமோதிக் கொண்டிருக்கும். எல்லா திருவிழாக்களையும் போல் பலூன் வியாபாரிகள், மிட்டாய் வண்டிகள், பொம்மை வியாபாரிகள், ஐஸ் வண்டிகள், சந்தனம் /பத்தி மற்றும் பூ வியாபாரங்கள் என இந்தப் பகுதி நிரம்பி வழியும்.

இந்த‌ முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்களும் மீன் சாப்பிடக் கூடாதாம். இதனால் பஞ்சா எடுக்கப்படும் ஊர்களில் இந்தப் பத்து நாட்களும் மிகவும் மலிவு விலையில் மீன்கள் விற்கப்படும். அதுபோல் பத்து நாட்களும் கணவன், மனைவி இல்லற‌த்தில் ஈடுபடக் கூடாது என்ற தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது இல்லற‌த்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றை காணிக்கை செலுத்தவேண்டும்!? 

நான்காம் நாளில் பெண்கள் தங்கள் வீடுகளில் ஹஸன், ஹுஸைன்(ரலி) இருவர் சார்பாகவும் இரண்டு கட்டில்களில் இறந்த உடல்களைப் படுக்க வைத்ததைப் போன்று செய்து, அதனருகே அமர்ந்து உருகி, உருகி அழுவார்கள். (கீழுள்ள படத்தைப் பார்க்கவும்)



(தொடரும்... இன்ஷா அல்லாஹ்)


19 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இன்னைக்கு 5ந்தேதி அஸ்மா. எல்லாரும் நான் எழுதுறேனே அந்த பூல்புலையா கோட்டைக்கு போயிடுவாங்க. இந்த லக்னோல அத வழக்கமா வச்சுருக்காங்க. அவங்க சடங்கு சம்ப்ரயாதயங்கள் அங்கே நடக்குமாம் :(

    இந்த மாதிரி முட்டாள்தனமான மூடபழக்கங்களை பார்த்து சிரிப்பதா வேதனைபடுவதா என தெரியவில்லை......

    நல்ல தெளீவை அனைவரும் பெற உதவும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக..

    ReplyDelete
  2. துணிச்சலான கருத்துக்கள்

    ReplyDelete
  3. எங்க ஊரில் பத்து நாட்கள் கொண்டாட்டம் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது.

    ReplyDelete
  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அஸ்மா அவர்களுக்கு
    அல்லாஹ் பரக்கத் செய்வானாக
    ரஹ்மத் (இறைவனின் அருட்கொடையை)பொழிவானாக
    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்
    இது போன்று இனையத்தை சரியாக அனைவரும் பயன்படுத்தினால் (இறைவன் நாடினால்)மூடநம்பிக்கையை கலைந்து உண்மையான இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தை அனைவருக்கும் கொண்டு சொல்லாம்
    தினந்தொரும் சிலருக்காக நான் தூஆ செய்வது என்னுடைய வழக்கம் அந்த லிஸ்டில் நீங்களும் இனைந்து விட்டீர்கள்

    ஜஸக்கல்லாஹ் கைர்

    சகோதரன்
    ஹைதர் அலி

    ReplyDelete
  5. அநாச்சாரங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ். எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால், வரும் கூட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது.

    எனினும், இதை இவ்வளவு விவரமாக, வரலாறு சொல்வதைப் போல் சொல்வதைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது.

    ReplyDelete
  6. தகவல்களுடன் பதிவு நன்றி

    ReplyDelete
  7. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இன்னைக்கு 5ந்தேதி அஸ்மா. எல்லாரும் நான் எழுதுறேனே அந்த பூல்புலையா கோட்டைக்கு போயிடுவாங்க. இந்த லக்னோல அத வழக்கமா வச்சுருக்காங்க. அவங்க சடங்கு சம்ப்ரயாதயங்கள் அங்கே நடக்குமாம் :( இந்த மாதிரி முட்டாள்தனமான மூடபழக்கங்களை பார்த்து சிரிப்பதா வேதனைபடுவதா என தெரியவில்லை......நல்ல தெளீவை அனைவரும் பெற உதவும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்குவானாக..//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்...

    ஷியாக்கள் அதிகமுள்ள ஏரியாவல்லவா அது? இதையெல்லாம் பார்த்தால் வெறுப்பும் வேதனையுமாக இருக்கிறது. அல்லாஹ்தான் நேர்வழி கொடுக்கணும். உங்களின் பிரார்த்தனைக்கு நன்றி ஆமினா, ஜஸாகல்லாஹு ஹைரா. இந்த தொகுப்புக்கு உதவியவர்களுக்கும் அதன் கூலி சேரட்டும் இன்ஷா அல்லாஹ்!

    ReplyDelete
  8. @ பார்வையாளன்...

    //துணிச்சலான கருத்துக்கள்//

    அப்படியா... மார்க்க விஷயங்களை உள்ளபடி சொல்வதற்கு பயம் தேவையில்லைதானே?:) தங்களின் வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  9. @ asiya omar...

    //எங்க ஊரில் பத்து நாட்கள் கொண்டாட்டம் ஒரு சில இடங்களில் நடந்து கொண்டு தான் உள்ளது//

    உங்க ஊரிலுமா ஆசியாக்கா..? :(

    ReplyDelete
  10. @ ஹைதர் அலி...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
    சகோ அஸ்மா அவர்களுக்கு
    அல்லாஹ் பரக்கத் செய்வானாக
    ரஹ்மத் (இறைவனின் அருட்கொடையை)பொழிவானாக
    அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ்//

    தங்களின் துஆக்களுக்கு ரொம்ப நன்றி, ஜஸாகல்லாஹு ஹைரா!

    //இது போன்று இனையத்தை சரியாக அனைவரும் பயன்படுத்தினால் (இறைவன் நாடினால்)மூடநம்பிக்கையை கலைந்து உண்மையான இஸ்லாத்தை அதன் தூய வடிவத்தை அனைவருக்கும் கொண்டு சொல்லாம்//

    அல்லாஹ் உதவி செய்வான், இன்ஷா அல்லாஹ்.

    //தினந்தொரும் சிலருக்காக நான் தூஆ செய்வது என்னுடைய வழக்கம் அந்த லிஸ்டில் நீங்களும் இனைந்து விட்டீர்கள்//

    அல்ஹம்துலில்லாஹ், சந்தோஷமாக உள்ளது. ஒருவருடைய துஆ நமக்கு கிடைப்பதும் கூட இறைவனின் அருள்தான்! அந்த வகையில் அந்த இறைவனுக்கே முதலில் நன்றி சொல்லணும். உங்களுக்காகவும் துஆ செய்கிறோம். நன்றி சகோ.

    ReplyDelete
  11. @ ஹுஸைனம்மா...

    //அநாச்சாரங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. அல்ஹம்துலில்லாஹ். எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால், வரும் கூட்டம் பெருமளவில் குறைந்துவிட்டது//

    தவ்ஹீத் கொள்கையை மக்கள் ஏற்று வரும் பகுதிகளில் நீங்கள் சொல்வதுபோல் அனாச்சாரங்கள் நிறைய குறைந்து வரத்தான் செய்கின்றன. இன்னும் விடாப்பிடியாக இருப்பவர்களுக்கும் இறைவன் நேர்வழியைக் கொடுக்கட்டும்!

    //எனினும், இதை இவ்வளவு விவரமாக, வரலாறு சொல்வதைப் போல் சொல்வதைத் தவிர்த்திருக்கலாமோ என்று தோன்றுகிறது//

    உங்கள் கருத்து நியாயம்தான் ஹுஸைனம்மா! டைப் பண்ண ஆரம்பிக்கும்போது உங்களுக்கு தோன்றியதுபோல்தான் எனக்கும் தோன்றியது. வேண்டாம் என்ற ஒன்றை விளக்கமாக சொல்லி, அந்த நிகழ்ச்சியையே விளம்பரப் படுத்துவதுபோல் ஆகிவிடுமோ என்று பயந்தேன்தான். ஆனால் அடிமட்ட அநியாயங்கள் நிறைந்த இந்த அனாச்சாரங்களை மக்கள் விளக்கமாக புரிந்துக் கொண்டால்தான், அதை செய்யாத மக்களாக இருந்தாலும் (வாய்ப்பு கிடைக்கும்போது) தன்னால் முடிந்த குறைந்த பட்ச எதிர்ப்பையாவது தெரிவிப்பார்களே என்று முடிவு பண்ணிதான் இப்படி விளக்கம்!

    கருத்துக்கு நன்றி தோழி. முழுமையாக சொல்லி முடித்த பிறகும் மறக்காமல் வந்து கண்டிப்பா உங்கள் கருத்தை பதியுங்கள் :)

    ReplyDelete
  12. @ THOPPITHOPPI...

    //தகவல்களுடன் பதிவு நன்றி//

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ. முடியும்போதெல்லாம் தொடர்ந்து படிங்க.

    ReplyDelete
  13. எங்க ஊர் பக்கம் இதல்லாம் இல்லை இரண்டு வருடத்திற்க்கு முன்பு சென்னையில்ப்பார்த்து மனவேதனை அடைந்தேன்.

    ஆழமான பகிர்வு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. @ ராஜவம்சம்...

    //எங்க ஊர் பக்கம் இதல்லாம் இல்லை இரண்டு வருடத்திற்க்கு முன்பு சென்னையில்ப்பார்த்து மனவேதனை அடைந்தேன்//

    பார்க்கும்போது நிச்சயமா ரொம்ப வேதனையாதான் இருக்கும்! இதே நிலையில் இவர்கள் மௌத்தானால்.. :(? அல்லாஹ்தான் நம் அனைவரையும் காப்பாற்றவேண்டும். என்ன கொஞ்ச நாளா இந்தப் பக்கம் காணோமே? வருகைக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  15. ஷிர்குகளின் முழு உருவமான சியா இனத்தவரின் கேடுகெட்ட செயல்களை ,சிலர் மார்க்கம் என நினைத்து செய்கிறார்கள். இவை ஊருக்கு ஊர் அவர்கள் நினைப்பது போல் மாற்றி கொண்டு செய்யும் இந்த கூட்டம் மார்க்க அறிவு கொஞ்சமும் அறியாதவர்கள்.

    ReplyDelete
  16. @ இளம் தூயவன்...

    //ஷிர்குகளின் முழு உருவமான சியா இனத்தவரின் கேடுகெட்ட செயல்களை ,சிலர் மார்க்கம் என நினைத்து செய்கிறார்கள். இவை ஊருக்கு ஊர் அவர்கள் நினைப்பது போல் மாற்றி கொண்டு செய்யும் இந்த கூட்டம் மார்க்க அறிவு கொஞ்சமும் அறியாதவர்கள்//

    இதில் வேறு ஊருக்கு ஊர் வித்தியாசமா செய்வார்களா? இவர்கள் இஸ்லாமியர்களே அல்ல என்றும் சொல்லுமளவுக்குதான் அவர்களின் மார்க்க அறிவு உள்ளது :(

    ReplyDelete
  17. வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன்.
    இன்று தான் உங்கள் வலைப் பக்கம் வந்தேன்.
    அருமையான கருத்துக்கள். பகிர்விற்கு நன்றி நண்பரே! தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள். நன்றி. நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும். கடைசியாக எழுதிய பதிவு கீழே:

    "மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

    ReplyDelete
  18. @ PUTHIYATHENRAL...

    தங்கள் வருகைக்கும் இந்த தளத்தில் இணைந்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete
  19. @ திண்டுக்கல் தனபாலன்...

    //தங்களின் முந்தைய பதிவுகளை படித்துக் கொண்டிருக்கிறேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது வாழ்த்துக்கள்//

    தங்களின் வாழ்த்துக்கும் வருகைக்கும், இந்த தளத்தில் இணைந்தமைக்கும் நன்றி.

    //நான் என் வலையில் மனித மனங்களைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். 15 பதிவுகள் எழுதி உள்ளேன். படித்து விட்டு கருத்து சொல்லவும்//

    நேரம் கிடைக்கும்போது நிச்சயம் படிக்கிறேன் சகோ.

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை