அஸ்ஸலாமு அலைக்கும்! இங்கு வருகைத் தரும் உங்களை அன்போடு வரவேற்கிறேன்!

Sunday 31 October 2010

உயிரையும் கொடுக்க உறுதிமொழி (ஹுதைபிய்யா தொடர் 2)

பைஅத்துர் ரிள்வான்:

தூதுச் சென்ற உஸ்மான்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியதும், நபி(ஸல்)அவர்களும் தோழர்களும் உஸ்மான்(ரலி)அவர்களின் உயிருக்காகத் தங்கள் உயிரை அர்ப்பணிப்போம் என்று உடன்படிக்கை எடுக்கிறார்கள். மேற்கொண்டு போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலை ஏற்படுகிறது. அப்படிப் போராடினால் அது சாதாரணமாக போராட்டமாக இருக்காது, மக்காவினுள்ளே போராடுவதாக இருந்தால் மக்கத்து நிராகரிப்பாளர்கள் இறுதிவரை போராடுவார்கள். இலகுவாக‌ பணிந்துவிட மாட்டார்கள். எனவே, அழிவு இரு புறமும் மிகப் பயங்கரமானதாக இருக்கும். இந்த வகையில் மரணம் உறுதியாகி விட்டாலும்கூட புறமுதுகுக் காட்டி ஓடக்கூடாது என்ற கருத்தில் நபி(ஸல்)அவர்கள் ஸஹாபாக்கள் அனைவரிடமும் பைஅத்(உறுதி மொழி)செய்கிறார்கள். ஒரு மரத்தடியில் நபி(ஸல்)அவர்கள் உட்கார்ந்திருக்க ஒவ்வொருவராக அனைவரும் வந்து பைஅத் செய்கிறார்கள். இது இஸ்லாமிய வரலாற்றில் "பைஅத்துர் ரிள்வான்"என சொல்லப்படுகிறது.

இதைப்பற்றி அல்லாஹுத்தஆலா கூறும்போது, அதில் கலந்துக் கொண்ட நபித் தோழர்களை, தான் திருப்திப்பட்டுக் கொண்டதாக கூறிக்காட்டுகிறான்.

"அந்த மரத்தினடியில் நம்பிக்கையாளர்கள் உம்மிடம் உறுதி மொழி செய்தபோது அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களது உள்ளங்களில் இருந்தவற்றை அறிந்தான். அவர்களுக்கு நிம்மதியை அருளினான். அவர்களுக்குச் சமீபத்தில் இருக்கும் வெற்றியையும் வழங்கினான்" (அல்குர்ஆன் 48:18)

அறிவிப்பாளர் யஸீத் பின் அபீ உபைத்(ரஹ்)அவர்கள் கூறுகிறார்கள்:

நான்,(இந்த செய்தியை எனக்கு அறிவித்த சலமா பின் அக்வஃ(ரலி)அவர்களிடம்) "அபூ முஸ்லிமே! அன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக (நபி(ஸல்)அவர்களிடம்) உறுதிமொழி அளித்தீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம்" என்று பதிலளித்தார்கள்.
                                                  நூல்: புகாரி, முஸ்லிம்

மேலும் இந்த உடன்படிக்கையை பாராட்டும் விதமாக, நபியவர்களிடம் தோழர்கள் செய்த உடன்படிக்கையானது தன்னிடம் செய்த உடன்படிக்கையாகும் என்றும் எல்லாம் வல்ல அல்லாஹ்தஆலா தன‌து திருமறையிலே குறிப்பிடுகின்றான்.

"உம்மிடத்தில் உறுதி மொழி எடுத்தோர் அல்லாஹ்விடமே உறுதி மொழி எடுக்கின்றனர். அவர்களின் கைகள் மீது அல்லாஹ்வின் கை உள்ளது. யாரேனும் முறித்தால் அவர் தனக்கெதிராகவே முறிக்கிறார். யார் தம்மிடம் அல்லாஹ் எடுத்த உறுதி மொழியை நிறைவேற்றுகிறாரோ அவருக்கு மகத்தான கூலியை அவன் வழங்குவான்." (அல்குர்ஆன் 48:10)

நபி(ஸல்)அவர்களும் தங்கள் உயிர்களை அர்ப்பணிக்கத் தயாரான தோழ‌ர்களை "பூமியில் சிறந்தவர்கள்' என்று பாராட்டுகிறார்கள்.

ஜாபிர்(ரலி)அவர்கள் கூறுகிறார்கள்:

நாங்கள் ஹுதைபிய்யா தினத்தன்று ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். அப்போது நபி(ஸல்)அவர்கள் எங்களிடம், "பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்தவர்கள்"' என்று கூறினார்கள். 
                                நூல்: முஸ்லிம்

உஸ்மான்(ரலி)அவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற தகவல் கேட்டு, அவர்க‌ளுக்காகதான் இந்த நிகழ்ச்சியில் உறுதிமொழி எடுக்கப்படுகிறது. ஆனால் அது வதந்தி என்று பின்னால் தெரிந்த‌ பிறகு, உஸ்மான்(ரலி)அவர்கள் ஏன் இதில் கலந்துக் கொள்ளவில்லை என்ற காரணத்தை விளக்குவதற்காக‌ (இந்த நிகழ்ச்சிகளுக்கு பிறகு) ஒருமுறை இப்னு உமர்(ரலி)அவர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்:

"பைஅத்துர் ரிள்வான்' சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் உஸ்மான் (ரலி) அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை விடக் கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந்திருந்தால் உஸ்மான் அவர்களுக்குப் பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை) எனவே தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உஸ்மானை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்பு தான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக் கையைச் சுட்டிக் காட்டி, "இது உஸ்மானுடைய கை' என்று சொல்லி அதைத் தம் (இடக்) கையின் மீது தட்டினார்கள். பிறகு, " (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும்' என்று சொன்னார்கள்.
                                 அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி); நூல்: புகாரி 

இவ்வாறு நடைப்பெற்ற இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சிக்கு பிறகு, நபி(ஸல்)அவர்கள் மக்காவை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார்கள்.

தொடரும்.... இன்ஷா அல்லாஹ்!



6 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அஸ்மா இஸ்லாமிய வரலாறு படிக்க நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்! முழு மூச்சோட 1,2 பாகத்தை படிச்சு முடிச்சுட்டேன். தொடர்ந்து எழுதுங்க. படிக்க காத்துட்டு இருக்கேன்.

    ReplyDelete
  2. @ ஆமினா...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அஸ்மா இஸ்லாமிய வரலாறு படிக்க நல்ல சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள்! முழு மூச்சோட 1,2 பாகத்தை படிச்சு முடிச்சுட்டேன். தொடர்ந்து எழுதுங்க. படிக்க காத்துட்டு இருக்கேன்//

    வ அலைக்குமுஸ்ஸலாம் வரஹ்... வாங்க ஆமினா, நலமா? உங்களின் மார்க்க ஆர்வம் பார்க்க சந்தோஷமாக உள்ளது, அல்ஹம்துலில்லாஹ்! தொடர்ந்து படிங்க இன்ஷா அல்லாஹ். தொடர்ந்து நான் எழுதவும் துஆ செய்யுங்கள். வருகைக்கு நன்றி ஆமினா!

    ReplyDelete
  3. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இஸ்லாமிய வரலாற்றில் மகத்துவம் மிக்க ஒரு நிகழ்வை தெள்ளத் தெளிவாக தந்துள்ளீர்கள் அஸ்மா அக்கா.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
    ஆமீன்..

    ReplyDelete
  4. @ Hasan1...

    //அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    இஸ்லாமிய வரலாற்றில் மகத்துவம் மிக்க ஒரு நிகழ்வை தெள்ளத் தெளிவாக தந்துள்ளீர்கள் அஸ்மா அக்கா.
    அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக..
    ஆமீன்..// மேலும் துஆ செய்யுங்கள். வருகைக்கு ந‌ன்றி தம்பி! தொடர்ந்து பாருங்கள்.

    ReplyDelete
  5. இஸ்லாமிய வரலாறையறிய சந்தர்ப்பத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் தோழி.
    அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்..

    ReplyDelete
  6. @ அன்புடன் மலிக்கா...

    //இஸ்லாமிய வரலாறையறிய சந்தர்ப்பத்தை அனைவருக்கும் ஏற்படுத்தி கொடுத்துள்ளீர்கள் தோழி.
    அல்ஹம்துலில்லாஹ் தொடர்ந்து எழுதுங்கள்..//

    இன்ஷா அல்லாஹ், துஆ செய்யுங்க தோழி!

    ReplyDelete

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன!

பயணிக்கும் பாதை